சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள அபிலாஷா வளாகத்தில் உள்ள குடியிருப்பில், நள்ளிரவில் நிகழ்ந்த ஒரு விபரீத சம்பவம் அந்தப் பகுதியையே உறைய வைத்துள்ளது. அங்குள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேலிருந்து ஒரு காதல் ஜோடி திடீரென கீழே விழுந்துள்ளது. பயங்கர சத்தம் கேட்டு ஓடிவந்த மக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த வாலிபரையும் இளம்பெண்ணையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு போலீஸார் விரைந்து வந்தனர். இதில் அந்த வாலிபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்; இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நடந்த மொட்டை மாடியில் போலீஸார் ஆய்வு செய்தபோது, அங்கு மது பாட்டில்களும் சிதறி கிடந்த துணிகளும் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்த வாலிபர் கீழே விழும்போது வெறும் உள்ளாடைகளுடன் இருந்ததால், இந்த வழக்கில் மர்மம் நீடிக்கிறது. இருவரும் மது அருந்திவிட்டு ஜாலியாக இருந்தபோது தவறி விழுந்தார்களா? அல்லது அவர்களுக்குள் ஏதேனும் தகராறு ஏற்பட்டு தள்ளிவிடப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண்ணுக்கு நினைவு திரும்பினால் மட்டுமே, அந்த நள்ளிரவில் மாடியில் நடந்த உண்மையான பயங்கரம் என்ன என்பது வெளிச்சத்திற்கு வரும்.
