உத்தரகாண்ட் மாநில எல்லையில் உள்ள இந்தியப் பகுதிகளான காலாபனி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா பிராந்தியங்களை சொந்தப் பகுதிகள் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நேபாளம், தற்போது இந்த இடங்களை உள்ளடக்கிய புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது.

நேபாள ராஷ்டிர வங்கியால் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய நாணயத்தில், விவகாரப்பகுதிகள் அடங்கிய மாற்றியமைக்கப்பட்ட வரைபடம் இடம்பெற்றுள்ளது. இதனால், பல ஆண்டுகளாக நீடித்து வரும் எல்லைத் தகராறு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

குறிப்பாக, 2020-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு, ஒருதலைப்பட்சமாக இந்த மூன்று பிராந்தியங்களையும் நேபாளப் பகுதிகளாகக் காட்டும் வகையில் புதிய வரைபடத்தை வெளியிட்டது. பின்னர், அந்த வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றமும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்தது.

இந்த நடவடிக்கையை இந்தியா அப்போது தெளிவாக எதிர்த்தது. “வரலாறு, புவியியல் மற்றும் இருதரப்பு உடன்படிக்கைகளுக்குப் புறம்பான, ஒருதலைப்பட்சமான மாற்றங்களை இந்தியா ஒருபோதும் ஏற்க முடியாது” என வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், தற்போது அதே வரைபடத்துடன் நாணயத்தை வெளியிட்டிருப்பது, நேபாளத்தின் நிலைப்பாட்டை மேலும் கடுமைப்படுத்தியதாக இந்தியத் தரப்பு மதிப்பிடுகிறது. இதனால் டெல்லியில் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.