சென்னை மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு மிக முக்கியமான போக்குவரத்து சேவையாக விளங்கும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு திருநெல்வேலிக்கு இயக்கப்படும் நெல்லை அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12631) நாளை (ஜூன் 27) திருநெல்வேலி சந்திப்பு வரை செல்லாமல், அதற்கு முன்னதாக உள்ள தாழையூத்து ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மறுமார்க்கமாகத் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் நெல்லை அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12632) ஜூன் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலி சந்திப்பிற்குப் பதிலாகத் தாழையூத்து ரயில் நிலையத்திலிருந்து இரவு 9 மணிக்குச் சென்னை நோக்கிப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்தத் திடீர் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வார இறுதி நாட்களில் தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள் இந்த மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தங்களது பயணங்களை உஷாராகத் திட்டமிடுமாறு சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பு காட்டுத்தீயாய் பகிரப்பட்டு வருகிறது.
