தமிழகத்தில் உள்ள 12 முக்கிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்குவது தொடர்பாகத் அரசு வெளியிட்டிருந்த டெண்டரைத் தற்போது தமிழ்நாடு அரசு முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தூய்மைப் பணிகளைத் தனியார் பங்களிப்புடன் (PPP Model) மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கை (Feasibility Report) தயாரிப்பதற்காகத் தவெக அரசால் இந்த டெண்டர் விடப்பட்டிருந்தது. அரசின் இந்தத் தனியார்மயமாக்கல் முயற்சிக்குத் தூய்மைப் பணியாளர்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும் தொடர்ச்சியாகக் கிளம்பி வந்தன.
நெருக்கடிகள் முற்றிய நிலையில், ஏழை எளிய தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், இந்தத் தனியார்மயமாக்கல் டெண்டரை மொத்தமாக ரத்து செய்வதாகத் தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தவெக அரசின் இந்தத் திடீர் பின்வாங்கலும், டெண்டர் ரத்து குறித்த அரசாணையும் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த அதிரடி முடிவை வரவேற்றுத் தூய்மைப் பணியாளர்கள் இனிப்புகள் வழங்கித் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அரசின் இந்தச் சாமர்த்தியமான முடிவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
