கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரைப் பகுதிகளில் ஐரோப்பிய பச்சை நண்டுகள் அதிக அளவில் காணப்படுவதால், அவற்றின் பரவலை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் பொறிகள் அமைத்து நண்டுகளை பிடித்து அழிக்க முயன்றனர்.

ஆனால், இந்த பொறிகள் அடிக்கடி சேதமடைந்தன. கரடி அல்லது ஓநாயின் செயலாக இருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகித்தாலும், நீருக்குள் அவை செல்ல முடியாது என்பதால் காரணம் புரியாமல் குழப்பம் நிலவியது.

 

இந்த மர்மத்தைத் தீர்க்கும் நோக்கில், நியூயார்க் கல்லூரியின் உதவி பேராசிரியர் கைலே ஆர்டெல்லே தலைமையிலான ஆய்வுக் குழு, கடற்கரைப்பகுதியில் கேமரா கண்காணிப்பை ஏற்பாடு செய்தது. சீல் அல்லது நீர் நாய் போன்ற கடல் விலங்குகள் காரணமாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், கண்காணிப்பு வீடியோவில் ஓநாய் இருப்பது தெளிவாக பதிவானது.

வீடியோவில், ஓநாய் ஒன்று பொறியுடன் இணைக்கப்பட்டிருந்த மிதவையை நீரிலிருந்து மணலுக்கு இழுத்து வந்தது. அதன் பின்னர், கயிற்றை பிடித்து இழுத்து, நீரில் இருந்த நண்டு பொறியை வெளியே கொண்டுவந்து, அதில் சிக்கியிருந்த பச்சை நண்டை தனது இரையாக எடுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளது. மனிதர்கள் அமைத்த பொறியை உடைத்துக்கொண்டு அதிலிருந்த நண்டை இரையாக மாற்றிய முதல் சம்பவம் இதுவாகும்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. “பொறி நீரில் உள்ளதையும், அதில் நண்டு இருப்பதையும் ஓநாய் எவ்வாறு உணர்ந்தது? மேலும் அதை எவ்வாறு வெளியே இழுத்து வர வேண்டும் என்பதை எப்படி அறிந்தது?” என்ற கேள்விகள் ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்த விசித்திரமான நடத்தை குறித்து மேலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.