கடந்த மாதம் தொடங்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மத்தியில் மிகக் குறுகிய காலத்தில் பலத்த வரவேற்பைப் பெற்று வரும் புதிய கட்சி ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’. இக்கட்சியின் நிறுவனரான அபிஜீத் திப்கே, தற்போது அமெரிக்காவில் படித்து  வரும் நிலையில், நாளை மறுநாள் அவர் இந்தியா வர உள்ளார்.

டெல்லியில் தற்போது நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள ‘நீட்’ (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக நடைபெறவுள்ள பிரம்மாண்ட போராட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கட்சியின் எழுச்சியும், அதன் நிறுவனரின் இந்திய வருகையும் தற்போதைய அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரின் வாலுஜ் பகுதியில் வசித்து வரும் அபிஜீத் திப்கேவின் குடும்பத்தினருக்கு, சமூக வலைத்தளங்கள் வாயிலாக தொடர்ந்து பல்வேறு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்தன. இதனால் அவர்களது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அபிஜீத்தின் குடும்பத்தினர் தற்போது திடீரென ஒரு ரகசிய இடத்திற்கு மாறியுள்ளனர்.

முன்னதாக, தனது மகன் அபிஜீத் திப்கே அரசியலில் ஈடுபடுவதில் விருப்பமில்லாமல், அவர் அரசியலை விட்டு முற்றிலும் விலகி இருக்க வேண்டும் என்று அவரது தந்தை பகவான்ராவ் திப்கே மற்றும் தாய் அனிதா ஆகியோர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மிரட்டல் மற்றும் குடும்பத்தினரின் தலைமறைவு காரணமாக அப்பகுதியில் தற்போது பரபரப்பான சூழல் நிலவுகிறது.