உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள பட்ஹட் நகரில், பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் வகையிலான மிகக் கொடூரமான விபத்து ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியின் போது, சாலையின் நடுவே உள்ள தடுப்பில் கொட்டப்பட்டிருந்த மண்ணை சமன்படுத்தும் பணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அப்போது மண்ணுக்குள் இருந்து மனித கால் ஒன்று வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை கண்ட பொதுமக்கள், அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மண்ணை அள்ளிப் பார்த்த போது, அங்கு ஒரு நபர் சடலமாக புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் கடந்த 10 நாட்களாக காணாமல் போன ‘மிண்டு’ என்ற கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. இரவு நேரத்தில் சாலையோர தடுப்பில் போர்வையை விரித்து அவர் தூங்கியபோது, அங்கு வந்த டம்பர் லாரி ஓட்டுநர், அவர் தூங்குவதை கவனிக்காமல் அவர் மீதே டன் கணக்கிலான மண்ணைக் கொட்டியுள்ளார். இதனால் மண்ணுக்குள் சிக்கி, மூச்சுத்திணறி அந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சடலத்தின் அருகில் இருந்த ரொட்டி, காய்கறி மற்றும் அவரது உடமைகளை வைத்து அவரது மனைவி கணவனின் உடலை அடையாளம் கண்டு கதறி அழுதது அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கட்டுமான பணியில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
