உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள தேவ்கான் கோட்வாலி பகுதியில், தனியாக பயிற்சி வகுப்பிற்கு  சென்றுகொண்டிருந்த மாணவி ஒருவரை, சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன் வழிமறித்துள்ளான். யாரும் இல்லாத தைரியத்தில் அந்த மாணவியிடம் அநாகரீகமான முறையில் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் நிலைகுலைந்த அந்த மாணவி, பயந்து ஓடாமல் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக உடனடியாக துணிச்சலுடன் குரல் எழுப்பினார். மேலும், அந்த நபரை நோக்கி பாய்ந்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே அவனுக்கு அடுத்தடுத்து பலத்த கன்னத்தில் அறைகளை விட்டு தனது தைரியத்தை வெளிப்படுத்தினார்.

மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடிவந்த வழிப்போக்கர்கள், அந்த ஆசாமியைக் கண்டித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். எனினும், அந்த மாணவி அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த கொடூரத்தை அங்கிருந்தவர்களிடம் விவரித்தார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை அடுத்து, போலீசார் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இதுகுறித்து டி.எஸ்.பி (CO) பூபேஷ் குமார் பாண்டே கூறுகையில், “சமூக வலைதள வீடியோவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தாரிடம் இருந்து புகார் பெறப்பட்டு, தலைமறைவாக உள்ள அந்த நபரை  பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.