2026 டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் டிரெஸ்ஸிங் அறையில் திலக் வர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் இடையே ஏற்பட்ட லேசான வாக்குவாதம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
காயத்திலிருந்து மீண்டு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மைதானத்திற்குத் திரும்பிய இளம் வீரர் திலக் வர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 45 ரன்கள் குவித்து, தனது வருகையை வலுவாகப் பதிவு செய்தார். இந்திய அணியும் இந்தப் போட்டியில் அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு வீரர்களின் ஓய்வறையில் திலக் வர்மா உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது சக வீரர் அர்ஷ்தீப் சிங், திலக் வர்மாவை கிண்டல் செய்யும் நோக்கில் தனது மொபைல் போனில் வீடியோ (Reel) எடுக்கத் தொடங்கினார். திலக் பார்ப்பதற்கு ‘மோசமாக’ இருப்பதாக வேடிக்கையாகக் கூறிய அர்ஷ்தீப்பின் செயலால் அதிருப்தியடைந்த திலக் வர்மா, கடுமையான தொனியில் வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு கூறினார்.
Arshdeep Singh making a reel after last night's warm up match.
– Tilak Varma was seen furious as Arshdeep took the video without his consent. 👀pic.twitter.com/Vvh6tiQCh1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 5, 2026
அருகிலிருந்த இஷான் கிஷனும் இந்த உரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில், திலக் வர்மாவின் கோபமான முகபாவனை ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்திய அணியினரிடையே ஒற்றுமை இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய மூவரும் களத்திற்கு வெளியேயும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஷ்தீப்பின் யூடியூப் வீடியோக்களில் இவர்கள் அடிக்கடி கேலி செய்து கொள்வது வழக்கம் என்பதால், இது திட்டமிடப்பட்ட ஒரு குறும்புச் செயலாகவே (Prank) பார்க்கப்படுகிறது.
