டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதில் இந்திய அணி உறுதியாக இருப்பதாகவும், இதற்காக வீரர்கள் இலங்கைக்குப் பயணம் செய்ய விமான டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 7) கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் நாளில் இந்தியா – அமெரிக்கா, பாகிஸ்தான் – நெதர்லாந்து உள்ளிட்ட மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

தற்போதுள்ள அட்டவணைப்படி பிப்ரவரி 15-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும். ஆனால், வங்கதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாகப் பாகிஸ்தான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் போட்டி நடைபெறுமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: “பாகிஸ்தான் அணியின் முடிவு எனது கட்டுப்பாட்டில் இல்லை. உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மாட்டோம் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. அவர்கள்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்று கூறி வருகின்றனர்.

ஐசிசி அட்டவணையில் எங்களுக்கான போட்டி இடம்பெற்றுள்ளது. அதற்கேற்ப எங்களது பயணமும் (விமான டிக்கெட்டுகள்) உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி கொழும்பு செல்லவுள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், “நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் மூன்று முறை விளையாடியுள்ளோம். பிப்ரவரி 15-ம் தேதி போட்டி நடுநிலையான இடத்தில் (இலங்கை) நடைபெறும் வகையில் அட்டவணை உள்ளது. அந்தப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் நிச்சயம் களமிறங்குவோம். ஒரு போட்டியைப் புறக்கணிப்பது என்பது வீரர்களுக்கும் கடினமான ஒன்றுதான்” என்று அவர் குறிப்பிட்டார்.