இந்தியா-நேபாளம் எல்லையில் உள்ள கலாபானி, லிபுலேக், மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளைத் தனக்குச் சொந்தமானது என நேபாளம் நீண்டகாலமாக உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியாவின் கூற்றுப்படி, இந்த உரிமைகோரல் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இருப்பினும், நேபாள அரசு இந்தப் பகுதிகளைத் தங்கள் நாட்டுப் பகுதிக்குள் இணைத்து வரைபடங்கள் மற்றும் நாணயத்தாள்களை வெளியிட்டு வருகிறது.தற்போது, நேபாளம் புதிதாக வெளியிட்டுள்ள 100 ரூபாய் நோட்டில் சர்ச்சைக்குரிய இந்தப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது.

அந்நாட்டின் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்துடன் இந்த நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. நேபாளத்தின் இந்தச் செயல், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் மீண்டும் ஒரு முறை பதற்றத்தை ஏற்படுத்தி, நிலைமையை மேலும் மோசமாக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.