உலக வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் தாய்மை அடைந்தவர் என்ற அதிர்ச்சிச் சாதனையைப் படைத்த பெரு நாட்டைச் சேர்ந்த லினா மார்செல்லா மெதினா (Lina Marcela Medina) குறித்த மர்மம், 85 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றுவரை நீடித்து வருகிறது. 1939 ஆம் ஆண்டில், வெறும் 5 வயதே ஆன லினாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதிக வறுமையில் வாழ்ந்த லினாவின் வயிறு பெரிதானபோது, ஆரம்பத்தில் அக்கம் பக்கத்தினர் அதை ஆன்மீகக் காரணமாகவோ, அல்லது ‘வயிற்றில் இருக்கும் சாத்தானால்’ ஏற்பட்டதாகவோ நம்பினர்.
ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவள் 7 மாத கர்ப்பிணி என்பது தெரிய வந்து மருத்துவர்களையே திகைப்பில் ஆழ்த்தியது.
அகாலப் பருவமடைதல் (Abnormally Early Puberty) காரணமாக, மிகச் சிறிய வயதிலேயே அவளுடைய இனப்பெருக்க உறுப்புகள் முழுமையாக வளர்ந்திருந்ததால், அவர் கருத்தரிக்கும் திறன் பெற்றிருந்தார்.
1939 மே 14 அன்று சி-செக்சன் (C-section) மூலம் லினாவுக்கு சுமார் 2.7 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஜெரார்டோ என்று பெயரிடப்பட்டது.
எனினும், லினாவை கர்ப்பமாக்கியவர் யார் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இந்தக் குற்றத்திற்காக இன்றுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.
