சீனாவின் ஹென்ஹான் மாகாணத்தைச் சேர்ந்த மா என்ற முதியவர், தனது இறுதி காலத்தில் தன்னை கவனித்துக் கொள்ள ஒரு “புதிய மகள்” தேவை என்று இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார். தனது 80 வயதில், ஆஸ்துமா மற்றும் நடப்பதில் சிரமம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் போராடும் மா-விற்கு, இரண்டு  மகள்கள் இருந்தும், யாரும் உதவ முடியாத நிலையில் உள்ளனர்.

மூத்த மகள் உறவைத் துண்டிக்க விரும்புவதாகவும், இளைய மகள் மனநல குறைபாட்டுடன் தன்னைக் கவனித்துக்கொள்ள இயலாத நிலையில் இருப்பதாகவும் அவர் ஒரு உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

தன்னைக் கவனித்துக்கொள்வது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, அன்றாடப் பணிகளுக்கு உதவுவது போன்றவற்றைச் செய்யும் ஒருவருக்கு, தனது இரண்டு குடியிருப்புகளில் ஒன்றை, அனைத்து உடமைகளையும், அத்துடன் மாதச் சம்பளமாக சுமார் ₹37,500  ஓய்வூதியத் தொகையையும் வழங்க மா தயாராக இருக்கிறார். மேலும், அவரிடம் சுமார் 400,000 யுவான் (சுமார் ₹50 லட்சம்) சேமிப்பும் உள்ளது.

இவர் தனது தேவைகளுக்காக “உறவு ஆதரவு ஒப்பந்தம்”  கையெழுத்திட விரும்புவதாகக் கூறியுள்ளார்.

மகள்கள் இருந்தும் முதுமையில் தனித்து விடப்படும் மா-வின் இச்சம்பவம், வேகமாக முதியோர் தொகை அதிகரித்து வரும் சீனச் சமூகத்தில் சுமார் 60% முதியவர்கள் தனிமையில் வாழும் ஒரு பரந்த சமூகப் பிரச்சினையின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகிறது.