அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, அங்குச் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்ற ஒரு புதிய அதிரடித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன்படி, அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்கப்படுவதோடு, இந்திய மதிப்பில் சுமார் 2.40 லட்சம் ரூபாய் ($2,600) ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள பதிவில், இந்தியர்களைக் குறிவைக்கும் வகையில் போஸ்டர்கள் பகிரப்பட்டுள்ளது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நபரை வலுக்கட்டாயமாக நாடு கடத்தினால் அமெரிக்காவுக்கு 18,000 டாலர் வரை செலவாகும் நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் 5,000 டாலருக்குள் வேலையை முடித்துவிடலாம் என்பதே டிரம்ப் அரசின் கணக்காக உள்ளது.
ஏற்கனவே 2025 முதல் சுமார் 22 லட்சம் பேர் இந்தத் திட்டத்தின் கீழ் வெளியேறியுள்ள நிலையில், தற்போது ஊக்கத்தொகையை உயர்த்தி இந்தியர்கள் உள்ளிட்ட குடியேறிகளைத் தாயகம் திரும்ப டிரம்ப் நிர்வாகம் ஊக்கப்படுத்தி வருகிறது.
