சீனாவின் சோங்கிங் (Chongqing) நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், பினிஷிங் லைனை நெருங்கிய சாம்பியன் வீரரை நடுவர் ஒருவர் வழிமறித்துத் தள்ளிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 15-ம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில், யுனான் மாகாணத்தைச் சேர்ந்த செங் சூலி (Sheng Xueli) என்ற வீரர் இலக்கை அடைய இன்னும் 10 மீட்டர்களே இருந்த நிலையில், திடீரென குறுக்கே வந்த நடுவர் அவரைத் தடுத்து நிறுத்தி வேறு பக்கம் தள்ளினார்.

மழையினால் தனது கண்ணாடி வேர்த்துவிட்டதாகவும் (Foggy glasses), அதனால் வீரரின் ஜாக்கெட் நிறத்தை வைத்து அவர் ‘ஹாஃப் மாரத்தான்’ வீரர் எனத் தவறாக நினைத்துவிட்டதாகவும் அந்த நடுவர் விளக்கமளித்துள்ளார்.

ஆனால், 2 மணி நேரம் 23 நிமிடங்களில் இலக்கை நெருங்கிய ஒரு சீனியர் வீரரை அடையாளம் காணத் தவறியது நடுவரின் மெத்தனப்போக்கையே காட்டுவதாகக் கண்டனங்கள் குவிந்தன.

இந்தத் திடீர் தடையால் நிலைதடுமாறிய செங் சூலிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தார். இந்தச் சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட சீன தடகள சங்கம், சம்பந்தப்பட்ட நடுவருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அந்த வீரரின் ஓட்ட நேரத்தை ஆய்வு செய்து அவரே வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.