மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் கருஞ்சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகக் கருதப்படும் ‘தெற்கு பார்ஸ்’ (South Pars) இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் முதல்முறையாகப் பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளன.

உலகின் மிகப்பெரிய எரிவாயு இருப்பைக் கொண்டுள்ள இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவீச்சால், ஈரானின் புஷேர் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிலையங்கள் தீப்பிடித்து எரிவதோடு, அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. ஈரானின் 70 சதவீத எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் ஒரு திட்டமிட்ட உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அண்டை நாடான கத்தார், இது சர்வதேச எரிசக்தி பாதுகாப்பிற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல் என இஸ்ரேலைச் சாடியுள்ளது.

“>

இந்தத் தாக்குதலால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், இதற்குப் பதிலடியாகச் சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களை நேரடியாகத் தாக்கப் போவதாகப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, சவூதியின் ஜுபைல் பெட்ரோ கெமிக்கல் வளாகம் மற்றும் அமீரகத்தின் அல் ஹசன் எரிவாயு வயல் ஆகியவற்றைத் தகர்க்கப் போவதாக ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளதால் வளைகுடா நாடுகள் கடும் அதிர்ச்சியில் உள்ளன.

இந்த மோதல் போக்கின் எதிரொலியாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 4 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து, ஒரு பீப்பாய் 108 டாலரைத் தாண்டியுள்ளது. போர் மேலும் தீவிரமடைந்தால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.