வடகொரியாவில் கடந்த மார்ச் 15-ம் தேதி நடைபெற்ற 15-வது உச்ச மக்கள் பேரவைத் தேர்தலில், அதிபர் கிம் ஜான் உன் தலைமையிலான ‘ஒர்க்கர்ஸ் பார்ட்டி ஆஃப் கொரியா’ 99.93 சதவீத வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 687 இடங்களையும் கிம் ஜான் உன்னின் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தட்டிப் பறித்துள்ளன. இதில் கிம்மின் தங்கை யோ-ஜோங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சோ சோன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் 99.99 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் தேர்தலின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான விதிகள் தான் இப்போது உலகளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

​வடகொரியாவில் ‘ஜனநாயகம்’ என்ற பெயரில் தேர்தல் நடந்தாலும், அங்கு வாக்காளர்களுக்கு வேறு எந்த மாற்றுத் தேர்வும் கிடையாது. தேர்தல் காகிதத்தில் (Ballot Paper) ஆளும் கட்சி முன்கூட்டியே தேர்வு செய்த ஒரே ஒரு வேட்பாளரின் பெயர் மட்டுமே இருக்கும். அவருக்கு வாக்களிப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. யாராவது வாக்களிக்க வரவில்லை என்றாலோ அல்லது அந்த வேட்பாளருக்கு எதிராகச் செயல்பட்டாலோ அது ‘தேசத்துரோகமாக’க் கருதப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்பட வாய்ப்புள்ளது. உண்மையில் இந்தத் தேர்தல் என்பது ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய அல்ல, மாறாக நாட்டில் எத்தனை மக்கள் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் ஒரு ‘அனதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு’ (Informal Census) என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.