கர்நாடக தலைநகர் பெங்களூருவில், வரதட்சணை தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகலகுண்டே பகுதியைச் சேர்ந்த 28 வயது வங்கி ஊழியர் பூஜாஸ்ரீ, ஆகஸ்ட் 30 அன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பூஜாஸ்ரீயின் தாய் சந்திரகலா, திருமணத்திற்குப் பிறகு தனது மகள் வரதட்சணைக்காக தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, அவரது கணவர் நந்தீஷ், மாமியார் ஷாந்தம்மா உள்ளிட்ட ஐவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நந்தீஷ் ஆகஸ்ட் 31 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பூஜாஸ்ரீ, நந்தீஷுடன் காதல் திருமணம் செய்திருந்தாலும், திருமணத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகளாக வரதட்சணை கொடுமையும் , கணவரின் தவறான உறவு குறித்த சந்தேகமும் தகராறுகளை ஏற்படுத்தியது. நந்தீஷ், பூஜாஸ்ரீயை உடல் ரீதியாகவும் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மன உளைச்சல் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
