ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பலியாபள்ளி கிராமத்தில், காதல் திருமணம் செய்த மகளை ‘இறந்தவர்’ எனக் கருதி, அவரது குடும்பம் புராணப்படி இறுதிச் சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவிசூர்யநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்த கிராமத்தைச் சேர்ந்த நிரஞ்சன் கவுட் என்பவர் மகள், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த குடும்பத்தினரும், கிராம மக்களும், அந்த பெண்ணை ‘இறந்தவர்’ என அறிவித்து, ஒரு வாழை மரத்தை அவரது உருவாக கருதி, புது புடவை அணிவித்து, ‘ராம நாம சத்தியம்’ என்று கூறி ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஊர் சுடுகாட்டில் புராணப்படி இறுதிச் சடங்கு செய்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் இந்த சாதிய குறுகிய மனப்பான்மையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த சம்பவம், சாதி வெறியையும், காலங்காலமாக பின்பற்றப்படும் பழமைவாத பழக்கங்களையும் வெளிப்படுத்துகிறது.