தமிழகத்தில் பொதுமக்களிடையே காணப்படும் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செறிவூட்டப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்ய தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், இத்திட்டங்களை முதற்கட்டமாகச் செயல்படுத்துவது குறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
இதன்படி, பொதுமக்கள் பரவலாகப் பாதிக்கப்படும் அனீமியா (இரத்தசோகை), விட்டமின் ஏ மற்றும் பி12 ஆகிய குறைபாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, இரும்புச்சத்து மற்றும் போலிக் ஆசிட் நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளது.
மேலும், மாலைக்கண் நோய் உள்ளிட்ட பாதிப்புகளைத் தடுக்கும் விட்டமின் ஏ மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான விட்டமின் டி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சமையல் எண்ணெயையும், புரதச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட கோதுமை மாவையும் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தங்கு தடையின்றி வழங்க அரசு உத்தேசித்துள்ளது.
ஏழை, எளிய மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இந்த மக்கள் நல நடவடிக்கை, சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
