ஒரு காலத்தில் வானத்தில் பறக்கும் விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ அண்ணாந்து பார்த்து வியந்தவர்களுக்கு, அதில் ஒரு முறையாவது ஏறிவிட மாட்டோமா என்ற ஏக்கம் இருப்பது இயல்பு. அப்படிப்பட்ட ஒரு ஏக்கத்தைத் தன் பெற்றோருக்காக நிறைவேற்றி வைத்திருக்கிறார் தர்மேந்திர பிலோட்டியா என்ற இளைஞர். வயல்வெளியில் நின்று கொண்டு வானத்தில் பறக்கும் ஹெலிகாப்டரை ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்த தன் தாய், தந்தையை அதே ஹெலிகாப்டரில் அமரவைத்து வானத்தை வலம் வரச் செய்திருக்கிறார் இந்த பாசக்கார மகன்.

கிராமத்து மண்ணில் தொடங்கி வானத்தின் உயரம் வரை தன் பெற்றோரை அழைத்துச் சென்ற இந்த நெகிழ்ச்சியான வீடியோ இப்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. ​டிஜிட்டல் கிரியேட்டராக இருக்கும் தர்மேந்திரா பகிர்ந்த இந்த வீடியோவை இதுவரை சுமார் 4.6 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். ஹெலிகாப்டரில் முதன்முறையாகப் பயணம் செய்த அந்தப் பெற்றோரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

“ஒவ்வொரு பெற்றோருக்கும் உங்களைப் போன்ற பிள்ளைதான் கிடைக்க வேண்டும்” என்றும், “உலகத்தையே ஜெயிச்சிட்டீங்க தம்பி” என்றும் நெட்டிசன்கள் இந்த மகனை மனதாரப் பாராட்டித் தள்ளி வருகின்றனர். ஒரு மகன் தன் வாழ்வில் அடையும் வெற்றியை விட, அந்த வெற்றியின் மூலம் தன் பெற்றோரின் கனவை நனவாக்குவதே ஆகச்சிறந்த தருணம் என்பதை இந்த வீடியோ உலகுக்கு உரக்கச் சொல்கிறது.