இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றான JEE தேர்வை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் மன அழுத்தம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. “நல்லா எழுதலன்னா வீட்ல என்ன சொல்லுவாங்களோ?” என்கிற பயமே பல மாணவர்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடுகிறது. இத்தகைய சூழலில், தேர்வு மையம் ஒன்றின் வெளியே தந்தை ஒருவர் அளித்த பேட்டி இன்று ஒட்டுமொத்த இணையதளவாசிகளின் இதயங்களையும் வென்றுள்ளது. “தன் பிள்ளை தேர்வைச் சரியாக எழுதாவிட்டால் திட்டுவீர்களா?” என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, அந்தத் தந்தை அளித்த பதில் ஒரு சிறந்த பாடம்.

​”தேர்வுக்கு முன்பே நான் என் பிள்ளையிடம் சொல்லிவிட்டேன், ஒருவேளை தேர்வு சரியாக அமையாவிட்டால் பரவாயில்லை, நீ வந்து நம்முடைய குடும்பத் தொழிலைப் பார்த்துக்கொள்ளலாம்” என்று அவர் கூறினார். மேலும் அவர் பேசுகையில், “எனக்கு இருப்பது ஒரே ஒரு பிள்ளைதான்; இந்தத் தேர்வுக்காக அவனது மனநலத்தையோ அல்லது அவனையோ நான் இழக்க விரும்பவில்லை. தேர்வின் அழுத்தத்தால் என் பிள்ளையை நான் இழந்துவிட்டால், வாழ்க்கையில் எல்லாவற்றையுமே இழந்துவிடுவேன்” என்று மிக உருக்கமாகத் தெரிவித்தார். ஒரு தந்தையின் இந்த நிபந்தனையற்ற அன்பும், ஆதரவும் மாணவர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.