பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா பகுதியில் நடந்த ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 40 வயதான முகமது ஷம்ஷேர் என்பவர், சுமார் 4 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட ‘ரசல் வைப்பர்’ (கண்ணாடி விரியன்) பாம்பைப் பிடித்து, அதனுடன் விபரீத விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். கிராம மக்கள் எவ்வளவோ எச்சரித்தும் கேட்காமல், பாம்பை இரு கைகளாலும் பிடித்து அந்தரத்தில் சுழற்றி விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகப் பாம்பு கைதவறி கீழே விழ, மின்னல் வேகத்தில் அது ஷம்ஷேரைத் தீண்டியது.

​பாம்பு கடித்த பிறகும் விடாமல் மீண்டும் அதைப் பிடித்த ஷம்ஷேருக்கு, சிறிது நேரத்திலேயே விஷம் உடல் முழுவதும் பரவத் தொடங்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், விஷத்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபரீத விளையாட்டின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “பாம்புகளுடன் விளையாடுவது உயிருக்கே உலை வைக்கும்” என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.