கொல்கத்தாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், மிகுந்த பொறுப்புடன் விளையாடி 26 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

தனது அரைசதத்தைக் கொண்டாடிய விதம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது; அவர் ஆரவாரம் ஏதுமின்றி அமைதியாகக் கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டு, மீண்டும் தனது கவனத்தை ஆட்டத்தின் மீது திருப்பினார்.

அரைசதம் அடித்த கையோடு ஆட்டமிழந்துவிடாமல், இந்திய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற நோக்கில் சஞ்சு சாம்சன் மீண்டும் நடுவரிடம் ‘கார்டு’ கேட்டு க்ரீஸில் நின்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஒரு புதிய இன்னிங்ஸைத் தொடங்குவது போன்ற அவரது இந்த அர்ப்பணிப்பைப் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வெகுவாகப் பாராட்டினார்.

சஞ்சு சாம்சனின் பேட்டிங்கில் தெரிந்த அந்தத் தெளிவும் நிதானமும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. ஒரு இக்கட்டான நேரத்தில் அணியைத் தாங்கிப் பிடித்த சஞ்சு சாம்சனின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.