ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற வாழ்வா-சாவா போரட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

196 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க வீரராக களம் கண்ட சஞ்சு சாம்சன் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடினார். வெறும் 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 97 ரன்கள் விளாசிய சஞ்சு சாம்சன், தனது சதத்தை நூலிழையில் தவறவிட்டாலும் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அவருக்குத் துணையாக திலக் வர்மா 27 ரன்கள் எடுத்து உதவினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், சஞ்சு சாம்சனின் இந்த மிரட்டலான ஆட்டம் ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது.

போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனின் அர்ப்பணிப்பைப் பாராட்டித் தள்ளினார். “இது எங்களுக்கு ஒரு கால் இறுதிப் போட்டி போன்றது; சஞ்சு அணியில் இல்லாத போது கடுமையாக உழைத்தார், அந்த உழைப்பிற்கான பலன் இன்று கிடைத்துள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், “பொறுமையுடன் காத்திருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதற்கு சஞ்சுவே உதாரணம்” என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ரோஸ்டன் சேஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 195 ரன்களைக் குவித்தது. இவ்வளவு பெரிய இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக முறியடித்தது உலகக்கோப்பை தொடரில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.