அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வணிக உறவுகள் இடர்பாடுகளை சந்தித்து வருகின்றன. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதற்கு எதிராக, அமெரிக்கா கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து, கடந்த 27ம் தேதி முதல் அமலில் கொண்டு வந்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த நெருக்கமான உறவு தற்போது விரிசலை சந்தித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா, சீனா மற்றும் ரஷியா ஆகிய மூன்று நாடுகளும் கலந்துகொண்டனர். இங்கு பிரதமர் மோடி, ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புதினுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா விதித்துள்ள வரி, ரஷியாவுடன் உள்ள எரிபொருள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தக நிலைமைகள் ஆகியவை குறித்து முக்கிய தீர்வுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் இந்தியா மீது கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். “இந்தியா நமக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர். ஆனால், நாங்கள் அவர்களிடம் குறைவாகவே பொருட்களை விற்பனை செய்கிறோம்.
இந்தியா நமிடம் இருந்து வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இது ஒருதலைபட்சமான பேரழிவு,” என்று கூறியுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக அமெரிக்கா இந்தியாவுடன் நடத்திய வணிகம் ஒரு நியாயமற்ற ஒப்பந்தம் போல் இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அதிக வரி காரணமாக வணிகத்தில் சமநிலை இல்லாமல் போய்விட்டது எனவும் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியா ரஷியாவிடமிருந்து அதிக எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதால், அமெரிக்க பொருட்களுக்கு தேவையற்ற தடை ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசு, அமெரிக்காவுக்கு நன்மையாகும் வகையில் வரிகளை முழுமையாக நீக்க முன்வந்த போதிலும், அந்த முடிவுகள் தாமதமாகவே எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா தனது முடிவுகளை சரியான நேரத்தில் எடுத்திருக்க வேண்டிய அவசியத்தை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
