சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு, உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் உட்பட பல முக்கிய உலக தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டின் இரண்டாவது நாளில் புதின் – மோடி இருதரப்பு சந்திப்பு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த சந்திப்புக்கு முன், புதின் தனது லிமோசின் வகை ஆடம்பர பாதுகாப்பு வாகனத்தில் பிரதமர் மோடியை அழைத்து செல்வதற்காக 10 நிமிடங்கள் காத்திருந்தார். பிறகு, இருவரும் ஒரே காரில் ரிட்ஜ் கார்ல்டன் ஹோட்டலுக்கு பயணித்தனர். அந்த பயணத்தின்போது, இருவரும் பல முக்கிய விவகாரங்களை உரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காரில் ஹோட்டலுக்கு சென்ற பிறகும், அவர்கள் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக அந்த காரிலேயே பேசிக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது X – பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்ததோடு, “அது ஆழமான அறிவு சார்ந்த உரையாடலாக இருந்தது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரும் பேசிக்கொண்டது ரகசிய உரையாடல் என தகவல்கள் வந்துள்ளன. இந்த சந்திப்பின் போது எடுத்த படங்கள் உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளன.
இருவருக்கும் இடையே பின்னர் நடைபெற்ற அதிகாரப்பூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தை, ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தது. இதில், உக்ரைன் போர் நிலவரம், அந்தப் பகுதியில் அமைதி மற்றும் உறுதியை ஏற்படுத்தும் வழிகள் குறித்தும் பிரதமர் மோடி தனது பார்வையை புதினிடம் வலியுறுத்தினார். இந்தியா, ரஷியா இடையிலான உறவுகள், பன்முகமாக வலுப்பெறும் சூழலில் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
