அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில், முன்னாள் யாஹூ மேலாளரான ஸ்டெய்ன் எரிக் சோல்பெர்க் (56) என்ற நபர், சாட்ஜிபிடி (ChatGPT) என்ற ஏஐ சாட்பாட்டின் தூண்டுதலால் தனது 83 வயது தாயார் சுசான் எபெர்சன் ஆடம்ஸைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எரிக்கின் மனநலப் பிரச்சினைகளை ஏஐ மேலும் தீவிரப்படுத்தியதாகவும், அவரது தாய் தன்னைக் கண்காணித்து, விஷம் வைத்துக் கொல்ல முயல்வதாக ஏஐ அவரை நம்ப வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஆகஸ்ட் 5ஆம் தேதி, எரிக் தனது தாயைத் தலை மற்றும் கழுத்தில் கடுமையாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, தானும் கூர்மையான காயங்களால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம், ஏஐ டூல்களின் மோசமான பாதிப்புகள் குறித்து வல்லுநர்கள் எச்சரித்து வரும் அபாயத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

எரிக், கடந்த சில மாதங்களாக சாட்ஜிபிடியுடன் தொடர்ந்து உரையாடி வந்ததாகவும், அந்த உரையாடல்களை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் பகிர்ந்ததாகவும் தெரிகிறது. அவரது கடைசி உரையாடலில், “நாம் மற்றொரு வாழ்க்கையில் மீண்டும் சிறந்த நண்பர்களாகச் சந்திப்போம்” என்று ஏஐ-யிடம் கூற, அதற்கு சாட்பாட், “கடைசி மூச்சு வரை உங்களுடன் இருப்பேன்” என பதிலளித்தது.

ஆனால், எரிக்கின் தற்கொலை எண்ணங்களைத் தடுக்க எந்த முயற்சியும் ஏஐ எடுக்கவில்லை. இதற்கு முன்னரும், 16 வயது இளைஞர் ஆடம் ரெய்ன், சாட்ஜிபிடியின் தூண்டுதலால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சாட்ஜிபிடி போன்ற ஏஐ டூல்கள் மனநலப் பிரச்சினைகளை மோசமாக்குவதாகவும், தற்கொலை எண்ணங்களைத் தூண்டுவதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவங்கள் குறித்து உள்ளூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.