தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் அவர் மீது சுமத்தப்பட்ட தனிப்பட்ட விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் தனது ஒற்றைப் பேச்சின் மூலம் முறியடித்த விதம், ஒரு தலைவனுக்குரிய அரசியல் முதிர்ச்சியைப் பறைசாற்றுவதாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
“என்னைச் சுற்றியுள்ள பிரச்சனைகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், அவை விவாதிக்கத் தகுதியற்றவை; அவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவர் மேடையில் அழுத்திச் சொன்னது, அவரை பலவீனப்படுத்த நினைத்தவர்களுக்குக் கிடைத்த ஒரு பதிலடியாகப் பார்க்கப்படுகிறது. எதிர்மறையான சூழலையும் தனக்குச் சாதகமாக மாற்றி, மக்களின் நலனைப் பற்றி மட்டுமே பேசும் அவரது இந்த அணுகுமுறை, இணையத்தில் “பாசிட்டிவிட்டி மாஸ்டர்கிளாஸ்” எனத் தொண்டர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
சர்ச்சைகளுக்குப் பதில் சொல்லாமல், ‘அன்னபூரணி சூப்பர் 6’ மற்றும் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ போன்ற ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை அவர் முன்வைத்தது, மக்கள் மனதில் அவரது இடத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. “நெகடிவ் விமர்சனங்களை ஊதித் தள்ளிவிட்டு, எப்படி முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை விஜய்யிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்” என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு அரசியல் மேடைகளில் பேசப்பட்ட உரைகளிலேயே இதுதான் மிகச் சிறந்த உரை என்றும், ஒரு தலைவன் எப்படித் தனது தொண்டர்களின் மனநிலையைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்கு இதுவே உதாரணம் என்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
