ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத் தலைநகர் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரைப் பூங்காவில் நேற்று (டிச. 14) மாலை நடந்த கொடூரத் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே நடைபெற்ற யூத மதப் பண்டிகையான ஹனுக்கா நிகழ்வை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதலில் இரண்டு போலீஸ் அதிகாரிகள், பெண்கள், குழந்தைகள் உட்படப் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மற்றொருவர் போலீஸ் காவலில் சிகிச்சையில் உள்ளார். மேலும், பாலத்தின் கீழ் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தத் துயரமான தருணத்தில் ஆஸ்திரேலிய மக்களுக்கு இந்தியா ஆதரவாக நிற்கிறது” என்றும் அவர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.