சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரில் 30-க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்குச் சமீபத்தில் நடந்த கூட்டுத் திருமண விழாவில், லியு ஜிமி மற்றும் லியாங் ஜிபின் ஆகியோரின் திருமணப் பின்னணி இணையவெளியில் பேசுபொருளாகி உள்ளது. மணமகன் லியாங் ஜிபினை விட மணமகள் லியு ஜிமிக்கு 12 வயது குறைவு. இவர்களின் காதல் கதை, 15 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு சோகமான நிகழ்வில் வேரூன்றியது.

கடந்த 2008-ம் ஆண்டு, வென்சுவான் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டபோது, பல பள்ளிக் குழந்தைகள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தேசத்தையே துயரத்தில் ஆழ்த்திய நிலையில், 10 வயது சிறுமியான லியு ஜிமி மண்ணில் புதையுண்டிருந்தார்.

இதைக் கேள்விப்பட்ட ராணுவ வீரரான லியாங் மற்றும் அவரது குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு லியுவைப் பத்திரமாக மீட்டனர். மயக்க நிலையில் இருந்த சிறுமி லியுவின் நினைவில் லியாங்கின் உருவம் மட்டும் லேசாகப் பதிந்தது. சிகிச்சை முடிந்து லியுவின் குடும்பம் ஹூனான் மாகாணத்திற்குப் புலம் பெயர்ந்தது.

பல ஆண்டுகள் கடந்த நிலையில், 2020-ம் ஆண்டு சாங்ஷாவில் உள்ள ஒரு உணவு விடுதியில் லியுவும், அவரது தாயும் பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த லியாங்கைக் கண்டனர். “இவர்தான் உன்னைக் காப்பாற்றியவர் போலிருக்கிறாரே?” என்று தாய் கூற, 22 வயதான லியு அதிர்ச்சியுடன் அவரிடம் சென்று, “லியாங் அண்ணா? நீங்கள் தான் என்னைக் காப்பாற்றியவரா?” என்று கேட்டுள்ளார்.

தன்னை அடையாளம் கண்ட லியுவின் திடீர் வருகை லியாங்கிற்கு ஆச்சரியத்தை அளித்தது. அன்று முதல் மொபைலில் பேசத் தொடங்கிய இவர்களின் நட்பு நாளடைவில் நேர்மையின்பால் ஈர்க்கப்பட்டு காதலாக மாறியது.

நன்றிக்கடனுக்காக அல்லாமல், லியாங்கின் மனவுறுதியும் நம்பிக்கையும் தன்னை ஈர்த்ததாக லியு கூறியுள்ளார். “12 ஆண்டுகளுக்கு முன் நான் அவளைக் காப்பாற்றினேன், ஆனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, என் வாழ்வின் ஒளியாக அவள் மாறிவிட்டாள்,” என்று லியாங் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த விதியை வென்ற காதலுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.