பாகிஸ்தான் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி சர்வதேச செய்திகளில் இடம் பெறுகிறது. சில நேரங்களில் பயங்கரவாத சம்பவங்களாலும், சில நேரங்களில் கடுமையான பணவீக்கச் சூழலாலும் அந்நாடு பேசுபொருளாகி வருகிறது. அடிப்படை உணவுப் பொருட்களையே வாங்க முடியாத நிலை அங்கு நிலவி வரும் நிலையில், தற்போது ஒரு ஏசி ரயிலின் உட்புறக் காட்சியை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, கவனம் பெற்றுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், அந்நாட்டின் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டிகளை காண்பிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கராச்சி–லாகூர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலின் வெளிப்புறத்தையும், பின்னர் ஏசி பெட்டிகளின் உட்புற வசதிகளையும் அந்த நபர் வீடியோவில் விளக்குகிறார்.
ரயிலின் இருக்கைகள் வசதியானவை என்றும், குடும்பப் பயணத்திற்கு ஏற்றவையாக உள்ளன என்றும் அவர் கூறுகிறார். மேலும், பெரிய ஜன்னல்கள், ஒவ்வொரு இருக்கைக்கும் மொபைல் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்களையும் அவர் பாராட்டுகிறார். பிற பெட்டிகளையும் காட்டி, அவற்றின் வடிவமைப்பு மற்றும் வசதிகளை சிறப்பாக விவரிக்கிறார்.
இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் shahfaizan1122 என்ற பயனரால் பகிரப்பட்ட நிலையில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இதற்கு ‘லைக்’ செய்து, கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram
குறிப்பாக இந்திய சமூக ஊடக பயனர்களிடமிருந்து இந்த வீடியோக்கு அதிக எதிர்வினைகள் வந்துள்ளன. ஏசி பெட்டிக்குள் மின்விசிறிகள் பொருத்தப்பட்டிருப்பதை சிலர் ஆச்சரியமாக குறிப்பிட்டனர். “இந்தியாவுடன் போட்டியிட வேண்டாம்” என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், “இந்த வசதி இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது” என்றும், “பாகிஸ்தான் மக்கள் இந்த ரயிலுக்கான டிக்கெட்டை வாங்க முடியுமா?” என்றும் நகைச்சுவை கலந்த கருத்துகளும் பதிவாகியுள்ளன. மேலும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானில், இவ்வாறு ஒரு ஏசி ரயில் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, எல்லை தாண்டிய விவாதங்களையும் கேலியையும் ஏற்படுத்தியுள்ளது.
