அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஓ.பன்னீர்செல்வத்தை மிகக்கடுமையாகச் சாடினார். “பச்சோந்தி நிறம் மாறுவது போல அடிக்கடி நிறம் மாறும் இவரால் அதிமுக-விற்குப் பிடித்த சனி நீங்கியது” என்று கூறிய அவர், ஓபிஎஸ் ஒரு சுதந்திரமான மனிதராகச் செயல்படவில்லை என்றும், திமுக-வின் கைப்பாவையாகவே இருந்து அதிமுக-வை அழிக்கத் துடித்தார் என்றும் பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
”வெளியிலிருந்து வரும் எதிரியை விட, கூடவே இருந்து சாப்பிட்டு, கூடவே படுத்து உறங்கும் துரோகி ஆயிரம் எதிரிகளுக்குச் சமம்” என்று குறிப்பிட்ட சி.வி. சண்முகம், அதிமுக எனும் இயக்கத்தை உள்ளிருந்தே கொல்லும் வியாதியாக ஓபிஎஸ் செயல்பட்டதாகச் சீறினார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கத்தை அழிக்க திமுக போட்ட சதிவலையில் ஓபிஎஸ் ஒரு கைகூலியாகச் சிக்கிக் கொண்டார் என்பதே யதார்த்தம் என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.
