தமிழக அரசியலில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு பெரும் மாற்றம் இன்று அரங்கேறியுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.-வில் இணைந்தார். இணைப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., “அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும் தளபதி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.-வில் இணைந்துள்ளேன். என்னுடைய தாய் கழகத்தில் மீண்டும் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இனி மு.க. ஸ்டாலின் தான் எனது தலைவர். ஒரு சாதாரண தொண்டனாகவே என்னைக் கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளேன்” என்றார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சாடிப் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி ஒரு சர்வாதிகாரியைப் போலச் செயல்படுகிறார். அவரது ஆணவப் போக்கினால் அ.தி.மு.க. அழிவுப்பாதைக்குச் செல்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.-வை அவர் திட்டமிட்டு அழித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது. அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் தி.மு.க.-வில் இணைந்தேன்” என அதிரடியாகக் கூறினார்.
தி.மு.க. ஆட்சியைப் பற்றிப் பேசுகையில், “அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் உள்ளது. ஒரு அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு அவர் கட்சியை வழிநடத்துகிறார். தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கி வரும் அவர், மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். மீண்டும் மு.க. ஸ்டாலின் தான் முதலமைச்சராக வருவார் என்பதைத் தமிழகப் பெண்கள் உறுதி செய்துள்ளனர்” என்றார்.
தனது எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசுகையில், “எனக்கு எந்தவித அச்சுறுத்தலோ, கட்டாயமோ இல்லை. சுயமாகச் சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த காலக் கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்டவே இந்த முடிவு. தளபதி வாய்ப்பு கொடுத்தால் வரும் சட்டசபைத் தேர்தலில் உறுதியாகப் போட்டியிடுவேன். அவர் எடுக்கும் முடிவுகளுக்கு நான் முழுமையாகக் கட்டுப்படுவேன்” என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
