சீனாவில் ஹோட்டல் அறையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்ட அந்தரங்க காட்சிகள், ஆபாச இணையதளத்தில் நேரலையாக (Live Streaming) ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆபாச வீடியோவை தேடி இணையதளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு வீடியோவில் தானும் தனது காதலியும் அந்தரங்கமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதைவிடக் கொடுமையாக, அந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட ஒன்று அல்ல; அது அந்தச் சமயம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது காதலியுடன் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இந்த வீடியோ படமாக்கப்பட்டது தெரியவந்தது.
காவல்துறையினர் அந்த ஹோட்டல் அறைக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்குள்ள மின்சார சுவிட்ச் போர்டுக்குள் மிகச்சிறிய ‘ஸ்பை கேமரா’ (Spy Camera) மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தம்பதியினருக்குத் தெரியாமலேயே அவர்களது அந்தரங்க காட்சிகள் ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்டு, சந்தா செலுத்தும் நபர்களுக்காக நேரலையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சீனக் காவல்துறை நடத்திய விரிவான விசாரணையில், நாடு முழுவதும் ஒரு பெரிய குற்றக் கும்பல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி, தம்பதியினரின் அந்தரங்க காட்சிகளைப் பதிவு செய்து கள்ளச்சந்தையில் ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்வது இவர்களது தொழிலாக இருந்துள்ளது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான தனிநபர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்கச் சீனக் காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் அறைகளில் தங்கும் போது தங்களின் தனிமனித சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
