அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியக் குடும்பம் ஒன்று தங்களது புதிய வீட்டிற்குள் பசுவை அழைத்துச் சென்று பாரம்பரிய முறைப்படி சடங்கு செய்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அதாவது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் புறநகர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு சொகுசு வீட்டிற்குள், அதன் உரிமையாளர்கள் ஒரு பசுவை மிகவும் கவனமாக அழைத்துச் செல்கின்றனர். ‘டெக்சாஸ் கௌசாலா’ (Texas Gaushala) என்ற சமூக வலைதளப் பக்கம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்தியப் பாரம்பரியப்படி, புதிய வீட்டிற்குள் ‘கோ மாதா’ எனப்படும் பசுவை அழைத்து வருவது மங்கலகரமானது என்றும், அது செல்வம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் என்ற நம்பிக்கையிலும் இந்த ‘கிரஹப்பிரவேச’ சடங்கு நடத்தப்பட்டுள்ளது.

இந்த வீடியோ ‘X’ தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, வெளிநாட்டினருக்கு எதிரான மனப்பான்மை கொண்ட சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய வீடு, ஆனால் பழங்கால சிந்தனை. வீட்டிற்குள் பசுவை உலாவ விடுவது அமெரிக்க கலாச்சாரத்துடன் ஒத்துப்போகாத செயல்” எனச் சிலர் விமர்சித்துள்ளனர்.

இருப்பினும், இந்திய வம்சாவளியினர் இதற்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர். “அமெரிக்க வீடுகளில் செல்லப் பிராணிகளாக நாய், பூனைகளை வளர்ப்பதை ஏற்கும் சமூகம், ஒரு புனிதமான சடங்கிற்காக பசுவை அழைத்து வருவதை மட்டும் ஏன் எதிர்க்கிறது?” என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது கலாச்சார வெறுப்பின் வெளிப்பாடு என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.