மதுரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த 83 வயது ஓய்வுபெற்ற அறநிலையத்துறை அதிகாரி நடராஜன், கழிவறையில் திடீரென சுயநினைவின்றி மயங்கி விழுந்துள்ளார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மகன் ஸ்வீடனிலும், மகள் வேலூரிலும் வசித்து வருகின்றனர்.

தினமும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கமுடைய நடராஜன், சம்பவத்தன்று டெலிவரி செய்யப்பட்ட மதிய உணவை எடுக்காமல் இருந்துள்ளார். இரவு உணவை டெலிவரி செய்ய வந்த வாலிபர் மதிய உணவு அப்படியே இருப்பதை கவனித்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததால் சந்தேகம் பலமடைந்துள்ளது.

இதுகுறித்து ஸ்வீடனில் இருக்கும் அவரது மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் அங்கிருந்தபடியே இந்தியாவின் அவசர உதவி எண் 101 மூலம் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார். அதிகாரி சுரேஷ் கண்ணன் தலைமையிலான தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, கழிவறையில் நடராஜன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு பிடித்தனர்.

உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மதிய உணவை எடுக்காததை வைத்து சுதாரித்துக் கொண்ட டெலிவரி பாயின் சமயோசித புத்தியாலும், ஸ்வீடனில் இருந்து மகன் எடுத்த வேகமான நடவடிக்கையாலும் முதியவர் நடராஜன் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்து நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.