விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அய்யனார் (55) என்ற விவசாயி, தனது தம்பியின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து மல்லிகைப் பூ சாகுபடி செய்து வந்தார். நேற்று காலை அய்யனார், அவரது மனைவி காமாட்சி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி சாந்தி (43) ஆகிய மூவரும் சேர்ந்து மல்லிகைத் தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, நிலத்தின் ஒரு பகுதியில் எதிர்பாராதவிதமாக உயரழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது. இதை சற்றும் கவனிக்காத சாந்தி, பூ பறித்துக் கொண்டே சென்றபோது அந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதில் அவர் மீது பலத்த மின்சாரம் பாய்ந்ததில் அலறியுள்ளார். சாந்தியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்த அய்யனார், உடனடியாக அவரைப் பாய்ந்து சென்று காப்பாற்றுவதற்காக அவரது கையைப் பிடித்து பலமாக இழுத்துள்ளார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அய்யனார் உடலிலும் மின்சாரம் பாய்ந்ததில், சாந்தி மற்றும் அய்யனார் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். அய்யனாரின் மனைவி காமாட்சி மீதும் மின்சாரம் பாய்ந்த போதிலும், அவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த சக விவசாயிகள் உடனடியாக ஓடிவந்து மின் இணைப்பைத் துண்டித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடல்களைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
