தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுத்து வரும் ஒவ்வொரு நகர்வும் உற்றுநோக்கப்படுகிறது.
இந்நிலையில், தவெக-வின் முக்கியப் புள்ளியாகப் பார்க்கப்படும் ஆதவ் அர்ஜுனா குறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கொடுத்துள்ள அறிவுரை இப்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
“ஆதவ் அர்ஜுனாவை கட்சியை விட்டு விலக்கி வைப்பதுதான் விஜய்க்கு நல்லது” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா மீது அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகளின் பார்வை ஏற்கனவே விழுந்துள்ள நிலையில், அவரைப் போன்ற ஒருவரை கட்சியில் வைத்திருப்பது தவெக-வின் பிம்பத்தைப் பாதிக்கும் என்று பாஜக தரப்பு சுட்டிக்காட்டுகிறது.
ஏற்கனவே விசிக-வில் இருந்து விலகி விஜய்யுடன் கைகோர்த்த ஆதவ், இப்போது தவெக-வின் ‘ஸ்கெட்ச்’ போடும் நபராக வலம் வருகிறார். ஆனால், அவர் மீது இருக்கும் பல்வேறு புகார்கள் விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதே பாஜக-வின் கருத்தாக உள்ளது.
திமுக-வை வீழ்த்த வியூகம் அமைத்து வரும் விஜய்க்கு, அவரது சொந்தக் கட்சியினரே ‘மைனஸ்’ ஆகிவிடக்கூடாது என்ற ரீதியில் இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
