பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று மிகவும் எச்சரிக்கையான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தைச் சட்டரீதியாகக் கட்டாயமாக்கினால், அதுவே பெண்களுக்கு எதிராகத் திரும்பிவிடும் எனத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி தலைமையிலான அமர்வு கவலை தெரிவித்துள்ளது.

“மாதவிடாய் விடுமுறையைச் சட்டப்படி கட்டாயமாக்கினால், தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு வேலை தரவே தயங்குவார்கள்; இது பெண்களின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு, அவர்களை வேலையிலிருந்து அந்நியப்படுத்தும் சூழலை உருவாக்கிவிடும்” என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

ஒரு நிறுவனமே முன்வந்து தன்னார்வமாக விடுமுறை அளிப்பது வரவேற்கத்தக்கது, ஆனால் அதைக் கட்டாயமாக்குவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது பெண்களை ‘தாழ்ந்தவர்கள்’ என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிவிடும் என்றும் நீதிமன்றம் அதிரடியாகக் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியது அரசுதான் என்பதால், அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி ஒரு மாதிரி கொள்கையை (Model Policy) உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.