சென்னையில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், அரசியலுக்கு வரும் திரையுலகினர் நேர்மையான வழியைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, அண்மையில் நடிகர் விஜய் பேசிய கருத்துகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அவர் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருமுறை படம் எடுத்துவிட்டால், நஷ்டம் ஏற்பட்டாலும் விடமாட்டார்கள். போட்ட முதலீடு திரும்ப வந்தாலே மீண்டும் படம் எடுக்கத் தொடங்கிவிடுவார்கள். லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை, தொழிலாளர்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். முதலாளி (தயாரிப்பாளர்) நன்றாக இருந்தால்தான் சினிமா உலகம் நன்றாக இருக்கும்.
தற்போதைய அரசியல் சூழல் குழப்பமாக உள்ளது. தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு பதிலைக் கூறுகிறார்கள். ஆனால், மக்கள் பணம் கொடுப்பவர்களிடம் வாங்கிக்கொள்கிறார்கள். இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அரசியலுக்கு வரும் சிலர், “யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் ஓட்டு மட்டும் எனக்குப் போடுங்கள்” என்று கூறுகிறார்கள். இது தவறான அணுகுமுறை.
ஒருவர் ஏழை, அவரிடம் கொடுக்கப் பணம் இல்லை என்றால் அவர் கொடுக்க மாட்டார், அது வேறு விஷயம். ஆனால், கொள்கை ரீதியாகத் தெளிவாக இருக்க வேண்டும். “நானும் லஞ்சம் கொடுக்க மாட்டேன், நீங்களும் யாரிடமும் வாங்காதீர்கள்” என்றுதான் சொல்ல வேண்டும். அதை விடுத்து, மற்றவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தனக்கு வாக்களிக்கச் சொல்வது தவறான முன்மாதிரி இல்லையா?
சினிமா துறையைச் சார்ந்தவர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன், அது மகிழ்ச்சிதான். ஆனால், அவர்கள் மக்களுக்கு உண்மையான நன்மைகளைச் செய்ய வேண்டும். பொதுவாகவே நான் இதைக் குறிப்பிடுகிறேன், யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தச் சொல்லவில்லை என்றார்.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், “மற்ற கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, தனக்கு வாக்களியுங்கள்” என்ற தொனியில் பேசியிருந்தார். இதனை முன்வைத்தே ராஜன் இவ்வாறு பேசியதாகத் திரைத்துறையினர் கருதுகின்றனர்.
