மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜார்கிராம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராஜ் கல்லூரி சதுக்கத்தில் உள்ள விக்ரம் சா என்ற சாலையோர வியாபாரியின் கடையில் ‘ஜால்முரி’ வாங்கிச் சாப்பிட்டார்.
இந்த நிகழ்வு தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, விக்ரம் சா ஒரே இரவில் நாடு முழுவதும் பிரபலமடைந்தார். ஆனால், இந்தத் திடீர் பிரபலம் தற்போது அவருக்குப் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.
அடையாளம் தெரியாத எண்களிலிருந்து அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வரத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, பாகிஸ்தான் நாட்டின் குறியீடான 92 மற்றும் பங்களாதேஷ் நாட்டின் குறியீடான 880 ஆகிய எண்களில் தொடங்கும் தொலைபேசி எண்களிலிருந்து இந்த அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் விக்ரம் சாவும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த அச்சத்திலும் கவலையிலும் மூழ்கியுள்ளனர். உயிருக்கு பயந்து விக்ரம் சா தற்போது தனது கடைக்குச் சென்று வியாபாரம் செய்வதைத் தவிர்த்து வருகிறார்.
இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில், ஜார்கிராம் மாவட்ட காவல்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விக்ரம் சாவுக்கு வெளிநாடுகளில் இருந்து உண்மையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது குறித்துப் போலீசார் விசாரித்து வரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அவரது கடைக்கு முன்பாக தற்போது மத்தியப் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
