மனைவி இறந்த துக்கம் தாளாமல், தனது ஐந்து வயது மகனைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரது மனைவி விஜி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். மனைவியின் பிரிவால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஸ்டீபன் ராஜ், யாரிடமும் சரியாகப் பேசாமல் சோகமாகவே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது மகனின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த ஸ்டீபன் ராஜ், பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விபரீத முடிவை எடுப்பதற்கு முன்னதாக ஸ்டீபன் ராஜ், தனது சகோதரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு உருக்கமான ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “என் மனைவி இல்லாத வாழ்க்கையை என்னால் வாழ முடியவில்லை; நான் இறந்த பிறகு என் மகன் அனாதையாகி விடுவான் என்பதால் அவனையும் என்னுடனேயே அழைத்துச் செல்கிறேன், எங்களை மன்னித்து விடுங்கள்” என கண்ணீருடன் பேசியுள்ளார். இந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சகோதரி அலறியடித்தபடி வீட்டிற்கு ஓடி வந்து பார்த்தபோது, இருவரும் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.