பீகார் மாநிலத்தில் கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்ததால் இடுப்பளவு வெள்ள நீர் தேங்கியிருந்தது. இங்கு வந்த இரண்டு பெண்கள், வெள்ள நீரில் குளித்துக்கொண்டே அதைத் வீடியோ எடுக்க விரும்பியுள்ளனர். அவர்களுடன் வந்த மற்றொரு பெண், தனது கைப்பேசியில் அவர்களைப் படம்பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

அப்போது திடீரென நீரின் வேகம் அதிகரித்து, அந்த இரு பெண்களும் சக்திவாய்ந்த நீரோட்டத்தில் சிக்கி கங்கை நதியை நோக்கி அடித்துச் செல்லப்பட்டனர். ஆரம்பத்தில் அவர்கள் தண்ணீரில் நீந்துவதாகவே அங்கிருந்த மக்கள் நினைத்துள்ளனர். ஆனால், அவர்கள் சாலையை விட்டு வெகுதூரம் அடித்துச் செல்லப்பட்டு, பயத்தில் உதவிக்காகக் கூச்சலிடத் தொடங்கிய பிறகே ஆபத்தின் தீவிரத்தை மக்கள் உணர்ந்தனர்.

பெண்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட சில உள்ளூர் இளைஞர்கள், உடனடியாகத் தண்ணீரில் குதித்து அவர்களைப் பின்தொடர்ந்து நீந்தினர். கணிசமான தூரம் நீந்திச் சென்று அந்த இரு பெண்களையும் நீரில் மூழ்க விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர். பின்னர் உடனடியாக ஒரு படகு வரவழைக்கப்பட்டு, அவர்கள் இருவரும் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

மீட்கப்பட்ட பெண்கள் இருவரும் உடனடியாகச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஆபத்தான சம்பவத்தின் போது, வீடியோ எடுத்துக்கொண்டிருந்த பெண் தனது கைப்பேசியை இழந்துள்ளார். இருப்பினும், பெண்கள் வெள்ள நீரில் குளிப்பதும், பின்னர் அடித்துச் செல்லப்படுவதும் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இந்தப் பகுதி நீரில் மூழ்குவது வழக்கம் என்பதால், மாவட்ட நிர்வாகம் தடுப்புகளை அமைத்துப் பாதுகாப்பை உறுதி செய்திருந்தது. ஆனால், அந்த எச்சரிக்கையை மீறித் தண்ணீருக்குள் இறங்கியதே இந்த ஆபத்திற்குக் காரணமாகும். அதிர்ஷ்டவசமாக இளைஞர்களின் சமயோசிதமான செயலால் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.