நேபாளத்தின் வட பகுதியில் உள்ள போதேகாஷி மற்றும் திரிசூலா ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,500-க்கும் அதிகமானோரைக் காணவில்லை. இந்த இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பல வெளிநாட்டினரும், சுமார் 320 இந்தியர்களும் அடங்குவர். தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த அசாதாரண சூழலில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு நேபாள அரசு நிதி இழப்பீடு வழங்குமா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. ஆனால், இதுவரை வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து நேபாள அரசு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆபத்தில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை பாதுகாப்பாக மீட்பதற்கே அவர்கள் முதன்மை முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
நேபாளத்தில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் நிபுணர் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. சர்வதேச சட்டங்களின்படி வெளிநாட்டு மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம் நேபாள அரசுக்கு இல்லை. இதனால், தனது நாட்டு மக்களுக்கு மட்டுமே மறுவாழ்வு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க அம்மாநில அரசு முன்னுரிமை அளிக்கிறது.
அப்படியானால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு இழப்பீடு எவ்வாறு கிடைக்கும் என்றால், அவர்கள் சர்வதேச பயணக் காப்பீடு அல்லது ஆயுள் காப்பீடு செய்திருந்தால், அதற்கான விதிகளின்படி உரிய தொகையைக் கோரிப் பெற முடியும். காப்பீடு செய்தவர்களின் வாரிசுகளும் இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், நேபாளத்தில் இயங்கும் நீர்மின் திட்டங்கள் அல்லது உள்கட்டமைப்பு சார்ந்த இந்திய நிறுவனங்களில் பணியாற்றிய போது இந்த பேரிடரில் சிக்கியிருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்தும் இழப்பீடு பெற சட்டப்படி வாய்ப்புள்ளது.
