தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகிய சமூக நீதி தலைவர்களின் பெயர்களும் அவர்களின் வரலாற்று பங்களிப்புகளும் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், “கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து பெரியார், அம்பேத்கர் மற்றும் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதை தற்செயலாக நடந்த சாதாரண ஒரு தவறாக பார்க்க முடியாது; இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகவே கருத வேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக நீதியை நிலைநாட்டப் போராடிய தலைவர்களின் பங்களிப்பு வரலாற்று ஆவணத்திலிருந்து விடுபட்டது குறித்து தமிழக அரசு உடனடியாகத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
