நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கு மற்றும் பேரிடரின் நடுவிலிருந்து வெளியான ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரைப் பிரிந்துவிட்ட இரண்டு பச்சிளம் குழந்தைகள், பேரழிவின் சுவடுகளுக்கு நடுவில் தங்களது பெற்றோரைத் தேடித் தவிக்கும் அவல நிலை அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
‘@JeetN25’ என்ற எக்ஸ் (X) தள பயனரால் பகிரப்பட்ட இந்த வீடியோ, நேபாளத்தின் துயர முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் தனது பச்சிளம் தங்கையைத் தனது முதுகில் சுமந்தவாறு, வெள்ளம் பாதித்த கடினமான பாதைகளில் நடந்து செல்கிறான்.
குழந்தைகளின் முகங்களில் அடிபட்ட காயங்களும், கீறல்களும் தெளிவாகத் தெரிவதுடன், அந்தச் சூழலை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் தவிப்பதும் பார்க்க முடிகிறது. இருப்பினும், தன் தங்கையைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல அந்தச் சிறுவன் காட்டும் உறுதியும், பாசமும் இணையவாசிகளின் நெஞ்சை உருக்கியுள்ளது.
இந்தக் காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, உலகெங்கிலுமிருந்து மக்கள் தங்களது வேதனையையும் அனுதாபங்களையும் பதிவிட்டு வருகின்றனர்:
Heartbreaking Visual from Nepal 💔
Little boy caring his younger sister 🥹 and finding their parents 😭.
Look at the pain and scratches on their faces. 💔💔💔 pic.twitter.com/oREDLzii6g
— Jeet (@JeetN25) August 30, 2026
இந்தச் சின்னஞ்சிறு உடலில் தன் தங்கையைச் சுமந்து அவளுக்கு அரணாக இருக்கும் விதம் நெஞ்சை அடைக்கிறது. சில மனிதர்களின் தலையில் ஏன் இவ்வளவு சீக்கிரமே இவ்வளவு பெரிய சோகம் சுமத்தப்படுகிறது?” என்று ஒரு பயனர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். வீடியோவை பதிவு செய்தவர் குழந்தைகளுக்கு உதவுவதை விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது சரியா? இதுவும் ஒரு வகையான வியாபாரமா? என்று பலர் கோபமும் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் வெளியான பிரபல ஜப்பானிய அனிமேஷன் படமான ‘Grave of the Fireflies’ திரைப்படத்தில் வரும் அண்ணன்-தங்கை பாசத்தை இந்தச் சம்பவம் பலருக்கு நினைவூட்டியுள்ளது. வெள்ளப் பேரிடரில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களை மீட்கும் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பெற்றோரைத் பிரிந்த இந்தச் சிறுமியும் அவளது அண்ணனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, விரைவில் தங்கள் குடும்பத்தினருடன் இணைய வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.
