தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் உள்ள பிரபல மதுபான விடுதி ஒன்றில் 18 வயது இளம் பெண் ஒருவர் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி உணவு மற்றும் ஏராளமான பானங்களை வாங்கியதன் மூலம் சுமார் 60,000 தாய்லாந்து பாட் (இந்திய மதிப்பில் சுமார் 1.7 லட்சம் ரூபாய்) வரை பில் தொகையைச் சேர்த்துள்ளார். அந்தப் பணத்தைச் செலுத்த முடியாமல் அவர் தப்பிக்க முயன்றபோது, அங்கிருந்த பார் ஊழியர்கள் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். காவல்துறையிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, அந்தப் பெண்ணிடம் பணத்திற்குப் பதிலாக அவரது முடியைப் பெற்றுக் கொள்ளும் விசித்திரமான “முடி வாங்கும் ஒப்பந்தம்” ஒன்றில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பார் ஊழியர் ஒருவர் எலக்ட்ரிக் ரேசர் மூலம் அந்த இளம் பெண்ணின் தோளில் தொங்கும் அளவுக்கு இருந்த அழகிய கூந்தலை மொத்தமாக மழித்து மொட்டையடித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதை அடுத்து, தாய்லாந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ளன. பணப் பாக்கியை வசூலிக்க இதுபோன்ற மனிதத் தன்மையற்ற மற்றும் அவமானகரமான முறைகளைக் கையாண்ட பார் நிர்வாகத்தின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தங்களுக்குப் பயம் காட்டியே அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதாக பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அந்தப் பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சமூக மேம்பாடு மற்றும் மனிதப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் சட்டத்தை மீறி தனியார் நிறுவனங்களே தங்களது கைகளில் தண்டனையை எடுத்துக் கொள்ளும் இது போன்ற வன்முறைச் செயல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்லவலைகளை ஏற்படுத்தியுள்ளன.