சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவோடு, தாங்கள் பார்த்து வந்த சொகுசான ஐடி வேலையைத் துறந்துவிட்டு வீதியோரத்தில் உணவு வண்டி அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கிய பொறியாளர்களின் கதை ஒன்று இணையத்தில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளது.

கிரேட்டர் நொய்டா பகுதியில் அமைந்திருக்கும் இந்த உணவு வண்டியில், தங்களின் முதல் நாள் அனுபவத்தை யூடியூப் வ்லாக்கராக பதிவு செய்து அவர்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏசி அறைகளில் உட்கார்ந்து பணியாற்றிய இளைஞர்கள், சுய தொழிலை நோக்கி அடி எடுத்து வைத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் பொறியியல் பட்டம் படித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தபோதிலும், பிறரிடம் வேலை செய்வதை விட சொந்தமாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணமே இவர்களை இந்த நிலைக்கு உந்தியுள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் தங்களின் முதல் உணவக வண்டியைத் தொடங்கியபோது, முதல் வாடிக்கையாளருக்காகக் காத்திருந்த தருணங்கள், சந்தித்த தடைகள் மற்றும் வியாபாரத்தின் ஆரம்பகட்ட சவால்கள் என அனைத்தையும் அந்த வீடியோவில் அவர்கள் மிக இயல்பாகப் பதிவு செய்துள்ளனர்.

சமூகத்தில் “இன்ஜினியரிங் படித்துவிட்டு தள்ளுவண்டியில் வியாபாரம் செய்கிறார்களா?” என்ற விமர்சனங்களை எல்லாம் தங்களின் உழைப்பாலும் நேர்மறை எண்ணத்தாலும் தகர்த்தெறிந்துள்ளனர். இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு வெறும் வேலைவாய்ப்பைத் தேடுபவர்களாக இல்லாமல், சுயசார்புடன் புதிய முயற்சிகளை மேற்கொள்ள இந்தச் சம்பவம் ஒரு மாபெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

மேலும் இவர்களின் முதல் நாள் வியாபார வீடியோ வெளியானதுமே, இணையவாசிகள் பலர் அவர்களுக்குத் தங்களின் வாழ்த்துகளையும் ஆதரவையும் அள்ளி வீசி வருகின்றனர். நேர்மையான உழைப்பும் துணிச்சலும் இருந்தால் எந்தத் தொழிலிலும் ஜெயிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ள இந்த பொறியாளர்களின் கதை, தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் செய்தியாக உலா வருகிறது.

“>