உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் தவறான எண் மூலம் அறிமுகமான பெண்ணை நம்பி, தனது அந்தரங்க வீடியோக்களையும் ரூ.4 லட்சத்தையும் பறிகொடுத்த வாலிபரின் ஏமாற்றக் கதை இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரேலியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு அலைபேசியில் வந்த அழைப்பில் பேசிய பெண், தவறுதலாக அழைத்துவிட்டதாகக் கூறிப் பேச்சைத் தொடங்கியுள்ளார். அந்தப் பெண்ணின் இனிமையான பேச்சில் மயங்கிய வாலிபர், அவருடன் தொடர்ந்து பேசி முதலில் நட்பாகவும், பின்னர் தீவிரக் காதலிலும் விழுந்துள்ளார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண், வாலிபரை “வீடியோ கால்” செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். காதலின் தீவிரத்தில் இருந்த வாலிபரும் எவ்வித யோசனையுமின்றித் தனது அந்தரங்க உடல் பாகங்களை வீடியோ காலில் காட்டியுள்ளார். அதை அந்தப் பெண் ரகசியமாகத் திரைப் பதிவு செய்து கொண்டார.

வீடியோ பதிவு முடிந்த அடுத்த கணமே, “ரூ.2 லட்சம் தராவிட்டால் இந்த அந்தரங்க வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என்று மிரட்டியுள்ளார். பயந்துபோன வாலிபர் முதற்கட்டமாக ரூ.2 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனால், அந்தப் பெண் மீண்டும் மிரட்டி மேலும் ரூ.2 லட்சத்தைப் பறித்துள்ளார்.

மொத்தம் ரூ.4 லட்சத்தை இழந்த பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பதுங்கியிருந்த அந்த மோசடிப் பெண்ணைக் கைது செய்தனர். முகம் தெரியாத ஆன்லைன் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த “செக்ஸ்டார்ஷன்” சம்பவம் உணர்த்துகிறது.